About Us | எங்களைப் பற்றி…

கோவை மறைமாவட்டத்தில் கவுண்டம்பாளையம் என்னும் பகுதியில் யூபிலி ஆண்டைக் கொண்டாடிய இளையோரின் பாதுகாவலர், தந்தை ஜான் போஸ்கோவின் ஆலயத்தில் உங்களால் முடிந்த நற்செய்தி பணியை செய்யுங்கள் எனும் குரல் அருட்தந்தை. சைமன் பீட்டர் அவர்களால் எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது.

மார்க்கு 16:15ல் இறைவன் இயேசு கூறிய, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி 2019ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி உருவாக்கப்பட்டது Don Bosco Kids Ministry.

எங்களால் உலகம் முழுவதும் பயணிக்க இயலாவிட்டாலும் உலகம் முழுவதிலும் உள்ள இணையத்தை எங்கள் சாவியாகப் பயன்படுத்தி எங்களால் இயன்ற நற்செய்திப் பணியை YouTube, Facebook, Instagram போன்ற வலைத்தளங்கள் மூலமாக செய்துவந்தோம்.

2020ஆம் ஆண்டில் என் பங்கில் பணியாற்றிய மறைந்த முன்னாள் பங்குத்தந்தை. ஜேசுதாஸ் அவர்கள் எங்களின் பணியைப் பார்த்து மகிழ்ந்து எங்களை வாழ்த்தினார். அவரின் வாழ்த்தில் புத்துயிர் பெற்ற நாங்கள் “ஒளியின் விதை” என்ற மாதாந்திர இலவச கத்தோலிக்க மின்னிதழை 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி வெளியிட்டோம்.

அன்று முதல் இன்றுவரை “ஒளியின் விதை” நற்செய்தியின் விதையாக தொடர்கிறது. எங்களின் நற்செய்திப்பணி குழந்தைகளை உற்சாகப்படுத்த இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு குழந்தைகளுக்குப் பலவித போட்டிகள் நடத்தி, அவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வந்தோம்.

பின்பு 2024ஆம் ஆண்டு எம் பங்கில் பதவியேற்று எங்களை வழிநடத்த வந்த அருட்தந்தை. ATS Kennedy அவர்கள், “எந்தப் பங்கிலும் இளைஞர்கள் மற்றும் பீடச்சிறார்கள் இதுபோன்றப் பணியை செய்ததில்லை. உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்” என்று கூறினார். அந்த வார்த்தைகள் நாங்கள் இறைவனின் பாதையில் சரியாகப் பயணிக்கிறோம் என்ற உணர்வை எங்களுக்குத் தந்தது. மேலும் எங்களை மெருகேற்ற ஆலயத்தின் நிகழ்வுகளையும் பதிவிட விரும்பிய எம் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில், ஆலயத்தின் நிகழ்வுகள், மாதம்தோறும் இரண்டு போட்டிகள் என புதிய உள்ளடக்கங்களை மின்னிதழில் இணைத்துப் பயணிக்கத் துவங்கினோம்.

2019ஆம் ஆண்டு, நல்ல நிலத்தில் விதை விதைக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு ஒளியின் விதையாக வளர்ந்து, 2025 ஆம் ஆண்டில் அதன் 6 ஆண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது.

புனித ஜான் போஸ்கோவின் வழிகாட்டுதலிலும், அன்னை மரியாவின் பரிந்துரையிலும், இறைவனின் வல்ல அருள் வளங்களால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.